அமெரிக்காவில் சடலமாய் மீட்கப்பட்ட இந்திய சிறுமி: வீட்டை சோதித்த அதிகாரி அளித்த நெஞ்சை உருக்கும் தகவல்

0
947

மரணம் அடைந்த இந்தியச் சிறுமி ஷெரின் மேத்யூஸின் ஒரு புகைப்படம் கூட அவர்களது வீட்டில் இல்லை என்றும், மேத்யூஸ் தம்பதி தாங்கள் பெற்ற பெண் குழந்தையையும், ஷெரினையும் ஒன்றுபோல நடத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த வெஸ்லி மற்றும் சினி மேத்யூ தம்பதியினர், இந்தியாவில் இருந்து ஷெரின் என்னும் 3 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் திகதி, அந்த சிறுமி காணாமல் போனதாக வெஸ்லி மேத்யூ பொலிசில் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த தம்பதியினர் வசித்து வந்த பகுதிக்கு அருகில், ஒரு சிறு பாலத்தின் அடியில் சிறுமியின் உடல் கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் வெஸ்லி, சினி மேத்யூ தம்பதி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு பிறந்த 4 வயது மகளை அவளது வீட்டில் இருந்து அழைத்து வரச் சென்ற விசாரணை அதிகாரி கெல்லி மிட்செல், நீதிமன்றத்தில் கூறியதாவது, தான் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி மேத்யூஸ் வீட்டுக்குச் சென்று அவர்களது பெண் குழந்தையை அழைத்து வந்தேன். அப்போது சினி மேத்யூஸ் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தார்.

அந்த வீட்டில் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அதாவது, அவர்களது வீட்டில் மேத்யூஸ் தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தையின் புகைப்படங்கள் இருந்ததே தவிர, ஷெரினின் எந்தபுகைப்படமும் அங்கே இல்லை. அதில் இருந்து, இவர்கள் தங்களது பெண் குழந்தையையும், ஷெரினையும் ஒன்றுபோல நடத்தவில்லை என்பது புரிந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 3 வயதான ஷெரினை பாதுகாப்பற்ற முறையில் தனியாக விட்டக் குற்றத்துக்காக, அவரது வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டதற்கு மறுநாளே, அவர்களது மகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த ஷெரினின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளது கால்களில் பல்வேறு காலகட்டங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *