ஜெ., உயிருக்கு போராடிய போதும் கோடிக்கணக்கில் லஞ்சம்… ஆதாரத்துடன் அம்பலம் : முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்..,

0
112

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடத்தி கோடிகளை குவித்த சேகர் ரெட்டியிடமிருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தொடர்ந்து கையூட்டு பெற்று வந்ததற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் உறவினர் தினகரனுக்கும் கையூட்டு வழங்கப்பட்டு இருப்பதாக சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சேகர் ரெட்டியிடமிருந்து கையூட்டு வாங்கியது குறித்த குற்றச்சாற்று புதிதல்ல. இது ஏற்கனவே வெளிவந்தவை தான். மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ஆய்வில் கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நடந்த பேரங்கள் குறித்தும் தொடர்புகள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோருக்கும் சேகர் ரெட்டி பெருமளவில் பணம் கொடுத்ததற்காக குறிப்புகள் அக்குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

அதன்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இன்று வெளியிட்ட செய்தியில் எந்தெந்த அமைச்சர்களுக்கு, எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் அப்போது முதலமைச்சர் பொறுப்பை கவனித்து வந்த பன்னீர்செல்வத்துக்கு ரூ.2.5 கோடி கொடுக்கப்பட்டதாக சேகர்ரெட்டியின் குறிப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 23.11.2016 அன்று ரூ. 2கோடியும், அடுத்த சில நாட்களில் மேலும் ரூ.3 கோடியும் கொடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி. உதயக்குமார் ஆகியோரும் சேகர் ரெட்டியிடமிருந்து கையூட்டு வாங்கியதாக அவரது குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் உறவினர் தினகரன் மற்றும் மேலும் பல அமைச்சர்களின் பெயர்களும் சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றதாக அவரது டைரிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக டைம்ஸ் நவ் செய்தி கூறுகிறது.


ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பிழைக்க வேண்டும் என்பதற்காக ஆலயங்களில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போதும் கூட ஜெயலலிதாவின் தளபதிகளாக காட்டிக்கொண்ட பன்னீர்செல்வம், எடப்பாடி உள்ளிட்டோர் தொடர் கையூட்டு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்பதிலிருந்தே அவர்கள் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததைப் போலக் காட்டிக் கொண்டு, லஞ்சப் பணத்துக்கு அடிமையாக இருந்தனர் என்பதை உணர முடியும். இவர்களை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பியிருந்த நிலையில், அப்புகார்கள் குறித்து கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அப்போதைய கண்காணிப்பு ஆணையர் கிரிஜா வைத்தியநாதனை கேட்டுக் கொண்டேன்.


ஆனால், அவரோ அவருக்கு பிறகு அப்பதவிக்கு வந்த நிரஞ்சன் மார்டி, ஜெயக்கொடி ஆகிய இ.ஆ.ப. அதிகாரிகளோ இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது கூடுதல் ஆதாரங்கள் வெளியாகியுள்ள சேகர் ரெட்டியிடம் கையூட்டு வாங்கிய முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு வசதியாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சரவை கூண்டோடு பதவி விலக வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தக் கோரி ஆளுனரிடம் முறையிடுவதுடன், உயர்நீதிமன்றத்திலும் பா.ம.க. வழக்குத் தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *