சிறையிலிருந்த மனைவிக்கு கஞ்சா பொட்டலம் வீசிய தினகரன்: திகைத்து போன பொலிசார்

456

தமிழகத்தில் விசாரணைக் கைதியாக இருக்கும் மனைவிக்கு, சிறைக்கு வெளியிலிருந்து கஞ்சாப் பொட்டலம் வீசிய கணவனின் செயல் பொலிசாரை அதிர வைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கேலியனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தினகரன்-திருநாவுக்கரசி. இருவரும், அப்பகுதியில் சாராயம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திருநாவுக்கரசியை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசி கடலூர் பெண்கள் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தனது மனைவியை பார்க்க தினகரன் மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகியோர் சிறைக்கு வந்து மனு கொடுத்து சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது கணவனைக் கண்ட திருநாவுக்கரசி ஏதோ ஒரு காரணத்தை கூறி தினகரனிடம் அழுதுள்ளார். இதனால் மிகவும் வருந்திய தினகரன், திருநாவுக்கரசியை சிறையின் மதில் சுவர் அருகே வந்து நிற்கும் படி கூறிவிட்டு வெளியில் வந்துள்ளார்.

அதன் பின் வெளியில் வந்த தினகரனும் அவரது நண்பர் சுதாகரும் கல்லில் கஞ்சாப் பொட்டலத்தை கட்டி மதில் சுவர் வழியாக மனைவிக்காக சிறைக்குள் வீசியிருக்கிறார்கள்.

இதை அங்கிருந்த சிறைக்காவலர்கள் பார்த்துவிட, அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பொலிசார் விடாது துரத்தியதால் சுதாகரை மட்டும் பிடித்துள்ளனர். தப்பியோடிய தினகரனை பொலிசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், சாரய தொழிலை செய்து வந்த திருநாவுக்கரசி எப்போதும் போதையில் தான் இருப்பாராம், இதனால் சிறையில் இருக்கும் அவர் மிகவும் கஷ்டப்படுவதை அவரது கணவர் தினகரன் அறிந்துள்ளார்.

தன்னை பார்க்க வந்த போது, தினகரனிடம் அதைப் பற்றி தான் கூறி அழுதும் உள்ளார். இதன் காரணமாகவே தினகரன் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.