தோண்ட தோண்ட வரும் பொக்கிஷங்கள்..12-ம் நூற்றாண்டிலேயே வீரத்திற்கு பெயர்போன தமிழ் பெண்கள் : ஆய்வாளர்களை பிரமிக்கவைக்கும் சோழர்கால வீரமங்கை நடுகல் கண்டெடுப்பு.,

485

தமிழரின் வரலாற்று பெருமையை உணர்த்தும் பொக்கிஷங்கள் ஆங்காங்கே தோண்டும்போது கிடைக்கின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் அருகே சோழர்கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் சல்லியூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் களஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, மானவள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தனியாருக்கு சொந்தமான  நிலம் ஒன்றில், மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர். பின்னர், சல்லியூர் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் அந்த நடுகல்லை மீட்டெடுத்தனர்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர்கள் கூறியதாவது:

இது 12ம் நூற்றாடை ஒட்டியதாக இருக்கக்கூடும்.இந்த நடுகல்லானது ஒரு வீரப் பெண்ணுக்காக அமைக்கப்பட்டதாகும். நடுகல்லில் காணப்படும் வீரமங்கை இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்திய நிலையில் காணப்படுகிறார். காலில் வீரக்கழல் காணப்படுகிறது. இந்தச் சிற்பமானது கல்லைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது.

இது, இந்தப்பகுதியில் போர் புரிந்து வீரமரணம் அடைந்த பெண்ணுக்காக செதுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அல்லது கொள்ளையர்களிடம் இருந்து தமது ஊரைக் காக்கப் போரிட்டு வீரமரணம் அடைந்த பெண்ணின் நினைவைப் போற்றுவதற்காகவும் இது செதுக்கப்பட்டிருக்கலாம்.

தமிழகத்தில் இதுவரை கிடைக்கப்பட்ட நடுகற்களில் பெண்களுக்கென எடுக்கப்பட்ட நடுகற்கள் எண்ணிக்கையில் குறைவேயாகும். அவ்வகையில் இந்த நடுகல் பெண்ணுக்கென எடுக்கப்பட்ட சிறப்பான நடுகற்களின் வரிசையில் முக்கிய இடம்பெறுகிறது.

இந்நடுகல் இருக்கும் இடத்துக்கு மிக அருகே பட்டாளத்தம்மன் என்ற கோயில் உள்ளது. “பட்டாளம்’ என்பது படையினைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வீரமங்கை நடுகல்லுக்கும், இக்கோயிலுக்கும் இருக்கும் தொடர்பினை இதன் வாயிலாக அறியலாம். சிலைவழிபாடற்ற அக்கோயிலும் மக்களது பயன்பாடு இன்றியே உள்ளது. காரணம், அக்கோயில் குறித்துக் கூறப்படும் அச்சம் தரும் கட்டுக் கதைகளேயாகும்.

அவ்வூர் மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இது ஒரு நடுகல் என்பதையும், நடுகற்கள் குறித்த வரலாறுகளையும் எடுத்துரைத்து, இக்கல்லின் மீது அவர்களுக்கு இருந்த அச்சத்தினைப் போக்கி இதனை முறைப்படி பாதுகாக்க அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றனர்.