அதிகாலையில் தனியாக சென்ற திருநங்கைகள்: பொலிசார் செய்த மோசமான செயல்

483

இந்தியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு திருநங்கைகளை பொலிசார் தாக்கியதோடு அவர்களிடம் மோசமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, மம்தா ஜாஸ்மின் மற்றும் சுஷ்மிதா ஆகிய இரண்டு திருநங்கைகள் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடன பயிற்சியை முடித்துவிட்டு கடந்த 27-ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது வண்டியை மறித்த பொலிசார், இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இப்படி அடித்தால் நாங்கள் இறந்து விடுவோம் என இருவரும் கதறிய நிலையில், நீங்கள் இறப்பது எவ்வளவோ மேல் என மனிதாபிமானம் இல்லாமல் பொலிசார் கூறியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து சென்ற மம்தாவும், சுஷ்மிதாவும் நண்பர்கள் உதவியுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்று தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து புகார் அளித்துள்ளனர்.

மீடியாவில் இதுகுறித்த செய்தி வந்ததால் மாநில முதல்வர் காதுக்கு இது சென்றதையடுத்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக சேவகியும், திருநங்கையுமான அலினா கூறுகையில், திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது.

எங்களுக்கு ஆதரவாகவும், எங்களை மதிக்கும் பொலிஸ் அதிகாரிகளும் இருக்கும் இச்சமூகத்தில் இதுபோன்ற தவறான காவலர்களும் உள்ளனர்.

மம்தாவையும், சுஷ்மிதாவையும் நிம்மதியாக வாழ விட மாட்டோம் எனவும் அவர்களை தாக்கிய பொலிசார் கூறியதாக அலினா கூறியுள்ளார்.