சொத்தை பிடுங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய பேரன் : நீதிகேட்டு போராடி வரும் 101 வயது மூதாட்டி

294

சொத்தை பிடுங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய பேரன் : நீதிகேட்டு போராடி வரும் 101 வயது மூதாட்டி – தட்டிக்கழித்த தல்லாகுளம் காவல் நிலையம்!

கிராமங்களில் இப்போதும் ஒரு பழமொழி இருக்கிறது. “ரெண்டு
விஷயத்துக்கு நாம கணக்கு பார்க்க கூடாது, ஒண்ணு, அம்மா அப்பாவுக்கு போட்ட சோறு, இன்னொன்னு அக்கா தங்கச்சிக்கு செஞ்ச சீரு”. இது உணர்வுப்பூர்வமான பழமொழி. ரத்த பாசம் என்பது, பிறந்து இறந்து போன பின்பும் நினைவுளுடன் வாழ்வது.

நமது செய்திப்புனல் பத்திரிகைக்கு, கடந்த 22-12-2017 அன்று தமிழ்நேசன் என்பவர், தனது பாட்டிக்காக, மதுரை கமிசனரிடம் கொடுத்த புகாரின் நகலை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், 22-12-2017 அன்று, மதுரை திருப்பாலை, முனீஸவரன் நகர், ராஜிவ் தெருவில் வசிக்கும், 101 வயதான இருளாயி அம்மாள் என்பவர், தள்ளாமையுடன் பாசப் போராட்டத்துடன் மதுரை மாநகர ஆணையருக்கு ஒரு புகார் அளித்திருந்தார்.

தனது மகள் வயிற்றுப் பேரன் கணேசன் என்பவர், தனது மகள் (கணேசனின் தாயார்) இறந்த பிறகு, தன்னை வீட்டை விட்டு போகச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். தள்ளாத வயதில் தன்னைக் கவனிக்க வேண்டிய, தன் பேரனுக்காக தன் நகை, நிலம் எல்லாம் விற்றுச் செலவு செய்திருக்கிறார். இப்போது, அந்தப் பேரன், தன்னை வெறுத்ததோடு மட்டுமல்லாமல், தன்னை அவமதித்ததையும் ஏற்றுக் கொள்ள இயலாமல், காவல் நிலையத்தின் படியேறியிருக்கிறார்.

இந்தப் புகார் மனு தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. ஆனால், அங்கு விசாரணை செய்த போது, இருளாயி அம்மாள் நகை நிலத்தை எல்லாம் வித்துச் செலவு செஞ்சதுக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டார்களாம்.

இதைச் சொன்ன இருளாயி அம்மாளின் இளைய பேரன், “ஏங்க, குடும்பத்துக்குள்ளே செலவு பண்ணினதுக்கெல்லாம், கணக்கு வச்சிப்பாங்களா? என்று கேட்டிருக்கிறார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இருளாயி அம்மாளுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை, என்று அவரது இளைய பேரன் தமிழ்நேசன் கூறுகிறார்.


இது பற்றி அவர் நமக்குச் சொன்ன விரிவான தகவல்கள் பாசப் பிணைப்பு மிக்கது.

இருளாயி அம்மாளுக்கு ராஜம்மா என்று ஒரே ஒரு மகள். அந்த ராஜம்மாளை, ராமாயி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஒரே மகளின் குடும்பத்திற்காக, சிரமப்பட்டு, கூலி சேலை செய்து பாடுபட்டிருக்கிறார்.

திருப்பாலையில் குடியிருந்த இவர் 2006-ல் ஊமச்சிகுளத்தில், 7 செண்டு இடத்தை வாங்கியிருக்கிறார். இந்த இடத்தை இவரது மகள் வயிற்றுப் பேரன் கணேசன் என்பவர், இருளாயி அம்மாளுக்குத் தெரியாமலேயே, 2011-ஆம் ஆண்டு 9 லட்சத்துக்கு, விற்று விட்டாராம். எழுதப் படிக்கத் தெரியாத இவரும், பேரனின் இந்த செய்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பிறகு, இருளாயி அம்மாளின் மகள் ராஜம்மாள் உடல் நலமில்லாமல் இருந்திருக்கிறார். அதனால், மகளைக் குழந்தையாகப் பாவித்து, அவரைக் கவனித்து குடும்பத்தையும் கவனித்து வந்திருக்கிறார் இருளாயி. அந்தக் காலத்துப் பெண் என்பதால், உடல் உழைப்பில் அதிக ஆர்வம் கொண்டவர் இருளாயி அம்மாள்.

தென்னங்கீற்றுக் குச்சிகளைக் கொண்டு விளக்குமாறு செய்து விற்றுக் கூட, குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்துள்ளார். பேரன்களைப் படிக்க வைத்து, தன் நகை நிலத்தை எல்லாம் விற்று குடும்பத்திற்காகச் செலவு செய்துள்ளார்.

இருளாயி அம்மாளுக்கு இரண்டு பேரன்கள், மூத்த பேரன் கணேசன் பிசினஸ்மேன். பைனான்சும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது பேரன் தமிழ்நேசன் என்பவர் சென்னையில் குடும்பத்துடன் உள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணி புரியும் இவர் அவ்வப்போது, சமயம் கிடைக்கும் போது, திருப்பாலைக்கு வந்து அம்மா மற்றும் பாட்டியைப் பார்த்து விட்டுச் செல்வார். மகள் ராஜம்மாள் தன் தாயாருக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறார்.

ஆனாலும், அவர் உடல் நலமில்லாமல் இருந்ததால், தனது வயதையும், உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், மகளுக்கும் பணிவிடை செய்திருக்கிறார்.ஆனால், கடந்த செப்டம்பர் மாதம், உடல் நலமில்லாமல் இருந்த ராஜம்மாள் இறந்து விட்டார்.

இறக்கும் தருவாயில், தன் தாயாரான இருளாயி அம்மாளை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு, பேரன் கணேசனிடம் சொல்லியிருக்கிறார். அவரும், சரி என்று வாக்களித்திருக்கிறார். ராஜம்மாள் இறந்ததும், சுடுகாட்டிலிருந்து தாயின் நகைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து விட்டாராம் கணேசன்.

தள்ளாத வயதில் உள்ள, பாட்டியைப் பார்த்துக் கொள்ள கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் மனமில்லையாம்.கணேசன்  கட்டிய புது வீட்டின் புகுமனை விழாவில், அந்த வீட்டிற்குச் சென்ற பாட்டி இருளாயி அம்மாளை, கணேசனின் மனைவி அவனமானப் படுத்தியிருக்கிறார்.

மேலும், இது வரை அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து, பாட்டியை மட்டும் விட்டு விட்டு, தனது புது வீட்டுக்குச் சென்று விட்டாராம் கணேசன். அந்த வாடகை வீட்டு உரிமையாளரிடம் சொல்லி, அந்தப் பாட்டியைப் போகச் சொல்லியும், அட்வான்சாகக் கொடுத்த தொகையையும் திருப்பித் தரச் சொல்லியிருக்கிறார்.

அனாதையான 101 வயதுப் பாட்டி பரிதவித்துப் போயிருக்கிறார். பிறகு சென்னையில் உள்ள தனது இளைய பேரன் தமிழ்நேசனுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அவர் தான் சென்னையில் இருந்து, மதுரைக்கு வந்து திருப்பாலையில் உள்ள தனது பாட்டியைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்குத் துணையாக, தமிழ்தேசனின் மனைவி தமிழ் இனியாவும்  இங்கு தான்  தங்கியிருக்கிறார்கள். பாட்டியைக் கவனிப்பதற்காக, சென்னையில் உள்ள தங்களது சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு, பாட்டியுடன செட்டில் ஆக முடிவெடுத்துள்ளனர்.

இந்தக் காலத்தில், இப்படி 101 வயதான பாட்டிக்காக, தன் வேலை, சொத்தை எல்லாம் விட்டு விட்டு பாட்டிக்கு ஆதரவாக இருக்கும் இளைய பேரன் தமிழ்நேசனின் ஆதரவும், பாசமும் தான் அந்த வயதான தாயை இன்னும் உயிருடன் வாழ வைத்திருக்கிறது.

தமிழ்நேசனும்,(வயது 43) இருளாயி அம்மாளை மனிதாபிமானம் இல்லாமல் அவமதித்த கணேசனும்(வயது 47) உடன் பிறந்த அண்ணன் தம்பிகள். ஆனால் இருவருக்கும் உள்ள வித்தியாசம், பாசத்திலும் பணத்திலும் தான்.

இதற்கு தீர்வு, பாசமும், பந்த உணர்வும் மட்டும் தான். இது தானாக உணரப்பட்டால் தான், இந்த மாதிரியான கை விடப்படும், வயதான தள்ளாத தாய்மார்களின் மனம் படும் பாட்டின் குறைபாடுகள் தீரும்.

source: seithipunal