பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா ? கூடாதா ?

233

அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் பழம் தான் பப்பாளி. பலரும் பப்பாளி சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பழத்தை ஒருவர் தங்களது அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா?

 

ஏனென்றால் பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் 100 கிராம் பப்பாளியில் 39 கலோரிகள், 5.90 கிராம் சர்க்கரை, 9.81 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் டயட்டரி நார்ச்சத்து, 0.14 கிராம் கொழுப்பு, 0.61 கிராம் புரோட்டீன், 328 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 0.04 mg வைட்டமின், 0.05 mg வைட்டமின் பி2, 0.338 mg வைட்டமின் பி3, 0.1 mg வைட்டமின் பி6, 38 mg வைட்டமின் பி9, 61.8 mg வைட்டமின் சி, 24 mg கால்சியம், 0.10 mg இரும்புச்சத்து, 10 mg மக்னீசியம், 5 mg பாஸ்பரஸ், 257 mg பொட்டாசியம், 3 mg சோடியம் நிறைந்துள்ளது.

மேலும் இதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட், ஜிங்க், காப்பர், மாங்கனீசு, செலினியம் போன்றவையும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

பப்பாளியை ஒருவர் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதன் ஒட்டுமொத்த நன்மைகளையும் பெறலாம். சொல்லப்போனால் எந்த ஒரு பழத்தையும் உணவு உண்ட பின் சாப்பிடுவதை விட, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தான், அதனுள் உள்ள சத்துக்களைப் பெற முடியும். இப்போது பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

செரிமானம்
பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.

இதயம்
பப்பாளிக்கும், இதயத்திற்கும் ஒரு நல்ல தொடர்பு உள்ளது. பப்பாளி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதய நோய்களான மையோகார்டியல் இன்ப்ராக்ஷன், சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும். இதில் உள்ள புரோ-கரோட்டினாய்டு பைட்டோ நியூட்ரியண்டுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது.


இரத்த அழுத்தம்

பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.கொலஸ்ட்ரால்

பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். மேலும் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், இது கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.

புற்றுநோய்
பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும். அதோடு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின்சி, ஈ, லைகோபைன், பீட்டா-கிரிப்டோஜாந்தின் மற்றும் பீட்டா-கரோட்டீன் புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கும்.

குமட்டல்
பப்பாளி குமட்டல், காலைச் சோம்பல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் போன்ற சத்துக்கள் தான் முக்கிய காரணம்.

வயிற்றுப்புழுக்கள்
பப்பாளி வயிற்றுப்புழுக்களை வெளியேற்ற உதவும். அதிலும் பப்பாளியின் விதையை உலர வைத்து அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன் பொடியுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் உட்கொண்டால், வயிற்றுப் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பாலியல் வாழ்க்கை
பப்பாளி ஆண்களுக்கு மிகச்சிறந்த பழம். இதில் உள்ள அர்ஜினைன் என்னும் நொதி, ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதோடு இந்த அர்ஜினைன் நைட்ரிக் ஆக்ஸைடுடன் சேர்ந்து செயல்பட்டு, ஆணுறுப்பின் தசைகளை மென்மையாக்கும். ஆண்கள் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

முதுமை தோற்றம்
பப்பாளி முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். இதற்கு இதில் உள்ள பல்வேறு முக்கிய பைட்டோ-நியூட்ரியண்டுகள் தான் காரணம். ஆகவே பப்பாளியை சாப்பிடலாம் அல்லது பப்பாளியின் தோலை சருமத்தில் 5 நிமிடம் தேய்த்தால், அதில் உள்ள அமிலம் சரும பொலிவை மேம்படுத்தும்.

அழற்சி
பப்பாளியில் புரோட்டீனை உடைத்தெறியும் நொதிகளான பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன் உள்ளது. இது சருமத்தில் உள்ள புரோட்டீன்களை உடைத்தெறிந்து, இறந்த செல்களை நீக்கி, சருமத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தடுக்கும்.

ஆர்த்ரிடிஸ்
பப்பாளியில் இருக்கும் முக்கிய நொதிகளான பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைக்கும். இதற்கு பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டீன் போன்றவைகள் தான் காரணம். ஆகவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை அன்றாடம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

எடை குறைவு
பப்பாளி உடல் எடையைக் குறைக்க உதவும். பப்பாளியில் கலோரிகள் குறைவு மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதோடு பப்பாளி நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

சளி
பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். ஆகவே ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக பப்பாளி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

கண்கள்
பப்பாளி கண்களுக்கு நல்லது. பப்பாளியில் உள்ள பீட்டா-கரோட்டீன், கரோட்டினாய்டுகள், லுடீன் போன்ற பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் கண்கள் மற்றும் கண் தசைகளுக்கு நல்லது. ஒருவர் தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.