நான் ஒரு மெக்கானிக்…” நீ அழுக்கா இருக்க…”அது மட்டும் இனித்ததா… ஏழை காதலனின் கண்ணீர் கதை!

388

நான் ஒரு மெக்கானிக். இது அவள் என்னை விரும்பும் போதும், என் பணத்தை செலவழித்த போதும் நன்கே அறிந்திருந்தாள். கல்லூரிப் படித்துக் கொண்டிருந்த வரை நான் ஒரு மெக்கானிக் என்பது அவளுக்கு பெரிதாகப் படவில்லை. பாக்கெட் மணி போக, அவளது செலவுகளுக்கு எனது பணம் தேவைப்பட்டதோ என்னவோ… காதல் என்ற பெயரில் என்னுடன் உறவில் இருந்தாள். திடீரென ஒரு நாள் உன் உடை அழுக்காக இருக்கிறது… உன்னிடம் நாகரீகம் இல்லை… உனக்கும் எனக்கும் செட்டாகாது என கூறி பிரிந்துவிட்டாள்.

உதறிச் சென்றாள்
உதறிச் சென்றாள்

பெரும்பாலான காதல் இணைவதற்கும் நண்பர்கள் தான் காரணம், பெரும்பாலான காதல்கள் பிரிவதற்கும் நண்பர்கள் தான் காரணம். நட்பு நமக்காக அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய உறவு. நமக்கு ஒருவர் நன்மை விளைவிக்கிறார் என்றால், அத்தனை பாசம் காண்பிப்பார்கள். அதவே, நமக்கு ஒருவர் தீமை விளைவிக்கிறார் என்றால், அந்த நபர் மீது தனது மொத்த வெறுப்பையும் கொட்டுவான் நண்பன். என் காதல் பிரிந்ததற்கும், என் காதலி என்னைவிட்டு பிரிந்ததற்கும் இரு விஷயங்கள் காரணங்களாக இருந்தன. ஒன்று அவளது ஹைகிளாஸ் நட்பு., மற்றொன்று அவளுக்கிருந்த சொகுசு வாழ்க்கை மீதான மோகம்.

நானும் அவளும் ஒரே டியூஷனில் தான் படித்து வந்தோம். அப்போது அவளுக்கும், எனக்கும் பெரிதாக எந்த தொடர்பும் இல்லை. உண்மையை கூற வேண்டும் என்றால் அவள் எல்லா தேர்விலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவி. நான் ஜஸ்ட் பாஸ் கேட்டகரி. சிறு வயது முதலே எனக்கிருந்த ஒரு நாட்டம் தான் என்னை படிப்பில் இந்த மார்க் போதும் என்ற வட்டத்திற்குள் நிற்க வைத்தது.

என் அப்பா ஒரு மெக்கானிக். எங்களுக்கென ஒரு சொந்த வீடும், அந்த வீட்டுக்கு கீழேயே ஒரு சிறிய மெக்கானிக் கடையும் இருந்தது. எனது, ஒரே குறிக்கோள், அந்த மெக்கானிக் கடையை பெரிதாக்க வேண்டும். எனக்கு கீழ் நாலைந்து நபர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு முதலாளியாக வேண்டும். இது தான் எனது ஆசை, இலட்சியம் எல்லாமும். இந்த வழியில் தான் நான் சிறு வயதில் இருந்தே பயணித்து வந்தேன்.

எனது ஹாபி வண்டிகளை பிரித்து மேய்வது, எனக்கு பிடித்த விளையாட்டும் அது தான். எனது பொழுதுபோக்கும் அது தான். எனக்கும் வாகனங்களும் இடையே ஒரு பெரும் காதல் இருந்தது. என் நண்பர்கள் அனைவரும் அதை அறிவார்கள். பத்தாவது படிக்கும் போதே ஒரு முழு இருசக்கர வாகனத்தை பிரித்து மேயும் திறன் கொண்டிருந்தேன் நான். என் இலட்சியம் என்னவென்று அறிந்த அப்பா, என்னை பெரிதாக மார்க் வாங்கு என கட்டாயப்படுத்தவில்லை. மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தால் போதுமானது என்ற கனவு மட்டும் இருந்தது.

என் டியூஷன் கிளாஸ் நேரம் மாலை ஆறுமணி. அவள் காலை நேரத்தில் வந்து செல்பவள். நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு வார இறுதி தேர்வு நாட்களில் மட்டும் தான் அமைந்தது. அதிலும், அவள் முன்பு நான் மொக்கையாக தான் இருப்பேன். தேர்வு எழுதிய கால் மணிநேரத்தில் தாள்களை திருத்தி அங்கேயே மதிப்பெண் கூறிவிடுவார் எங்கள் டியூஷன் மாஸ்டர். அவர் ஒரு ரஜினி ரசிகர் என்பதால்.., மார்க் கூறும் போது, உடன் ஒரு பஞ்ச டயலாக் பேசி மானத்தை வாங்கி அசிங்கப்படுத்துவார்.

அப்போது நாங்கள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தோம். டிசம்பர் மாதம் எட்டும் போது அவர் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வர வேண்டும். வெவ்வேறு நேரங்களில் வரக் கூடாது. அனைவருக்கும் மாதிரி தேர்வுகள் துவங்கி இருக்கிறது என கூறினார். ஆகையால், காலை, மாலை என அனைத்து பேட்ச் மாணவர்களுக்கும் ஒரே டியூஷன் நேரம் அமைந்தது. +2 மாணவர்கள் மாலை 4-6 மணிக்கும், 10வது மாணவர்கள் 6-8 மணிக்கும் டியுஷன் வர வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் அனைவரும் தேர்வு எழுதினார்களோ இல்லையோ, அவளுக்கு காதல் கடிதங்கள் எழுதினார்கள். என்னுடன் டியூஷன் பயின்ற இரண்டு நண்பர்களே அவளுக்கு காதல் கடிதம் எழுதி பிரபோஸ் செய்தனர். ஆனால், அவளுக்கு அப்போது காதலில் விருப்பம் இல்லை. அவர்கள் வீட்டில் மிகவும் ஸ்ட்ரிக்ட் என்பது வெகு சிலர் மட்டுமே அறிவார்கள்.

அவள் பத்தாவது படித்து முடித்த கைய்யுடன் +2 சேர்ந்தாள். நமக்கு ஒரு பொது தேர்வே போதும், படாதுபாடு படுத்திவிட்டது என டிப்ளமோ இன் மெக்கானிக்கல் தேர்வு செய்தேன். அதை முடித்த பிறகு பி.இ. படிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஏற்கனவே மெக்கானிக் கடை மற்றும் வாகனங்களை பிரித்து மேய்ந்த அனுபவம் இருந்ததால், இந்த படிப்பு எனக்கு மிகவும் எளிமையாக இருந்தது. தியரியில் தடுமாறினாலும், பிராக்டிகல் பிரிவில் என்னை அடித்துக் கொள்ள ஆளில்லை.

பணத்தை உறுஞ்சிவிட்டு, நடுத்தெருவில்
பணத்தை உறுஞ்சிவிட்டு, நடுத்தெருவில்

நான் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்துக் கொண்டிருந்த போது தான், அவள் முதலாம் ஆண்டு பி.இ-யில் சேர்ந்தாள். நாங்கள் இருவரும் பயணிக்கும் சாலை என்று தான். அவள் கல்லூரியை தாண்டி தான் எனது கல்லூரி. இப்படியாக தான் துவங்கியது எங்கள் காதல் பயணம். ஒருமுறை நீ ரஜினி மாஸ்டர் டியூஷன் கிளாஸ்ல தான படிச்ச? என அவளாக பேசத் துவங்கினாள். படிப்படியாக நிறைய பேசினோம், பழகினோம். அவள் எங்களை எல்லாம் எப்படி பார்த்தால், அவளுக்கு எங்கள் மீதான பார்வை எப்படி இருந்தது என பலவன கூறினாள்.

கடைசி செமஸ்டர் போது எனக்கான பைக்கை நானே செகண்ட்ஸ்ல் வாங்கி உருவாக்கி கொண்டேன். ஆல்டர் செய்த பைக் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தேர்வு நேரங்களில் அவளை சீக்கிரம் கல்லூரியில் டிராப் செய்துள்ளேன். நான் காதலித்த பைக் தான், எனக்கொரு காதலியை ஏற்படுத்திக் கொடுத்தது. காதல் செட்டானதால், பி.இ சேர வேண்டும் என்ற கனவை காட்டிலும், வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாக வேண்டும். தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்., மெக்கானிக் கடையை பெரிதாக்க வேண்டும் என்ற கனவே முக்கியமாக இருந்தது

இந்த நேரத்தில் தான் அப்பாவிற்கும் எனக்கும் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டது. அப்பாவுக்கு நான் பி.இ. படிக்க வேண்டும் என்ற ஆசை. எனக்கு வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாக வேண்டும் என்ற அசை. அப்பா இன்னும் நான்கைந்து ஆண்டுகள் உழைக்க தயாராக தான் இருந்தார். ஆகையால் எனது முடிவு அவருக்கு பிடிக்கவில்லை. எப்படி இருந்தாலும் பி.இ-யில் எனக்கான பாடத்தை பெரிதாக நான் கற்க போவதில்லை. புத்தகத்தில் இருப்பதை காட்டிலும் நிஜத்தில் வாகனங்களில் எனென்ன மாற்றங்கள் செய்யலாம் என்ற அறிவு எனக்கு அதிகமாக இருந்தது.

ஒரு நாள் என் காதலியும், அவளது தோழிகளும் பிட்சா ஹட்டுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள் நினைத்து சென்றது ஒன்று, ஆனால், அங்கே அவர்கள் உண்டு கழித்தது ஒன்று. பில் எகிறி நிற்க, அவள் எனக்கு கால் செய்தாள். அவசர, அவசரமாக வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு பல்சரில் வீரிட்டு சென்றேன். என் காதலி அங்கே அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதே எனது ஒரேக் குறிக்கோளாக இருந்தது.

அவள் பணமில்லாமல் அசிங்கப் படக் கூடாது என நான் கருதினேன். ஆனால் அவளுக்கு, அவள் தோழிகள் முன்பு நான் அழுக்கு உடையில் வந்தது அசிங்கமாக இருந்தது. அதன் பிறகு அவளது தோழிகள், தோழர்களின் பேச்சை கேட்டு என்னுடன் பேசுவதை, பழகுவதை குறைத்துக் கொண்டால். ஆரம்பத்தில், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினாள். நான் பலமுறை அவளை கல்லூரி வாசலில் டிராப் செய்ததுண்டு, முக்கியமாக தேர்வு நாட்களில். இந்த சம்பவம் நடந்த பிறகு எந்த தேர்வு நாட்களிலும் அவள் என்னை அழைக்கவில்லை. நானாக சென்ற போதும் கூட, கல்லூரிக்கு எல்லாம் வராதே என கூறி சென்றுவிட்டாள்.

ஒரு நாள், அவளது தோழி மூலமாக தான், அவளுக்கு என்னை பிடிக்கவில்லை. அவள் என்னைவிட்டு பிரியப் பார்க்கிறாள் என்ற தகவல் அறிந்தேன். நான் எப்போதும், எந்த செய்தியும் கண்டு துள்ளிக் குதித்து ஆடுபவனோ, அல்ல இடிந்துப் போய் உட்காருபவனோ அல்ல. எதுவாக இருந்தாலும், முகத்திற்கு நேர் பேசுவதே எனது சுபாவம். மாலை அவளது கல்லூரிக்கு சென்றேன். வெளிய அவளது தோழிகளுடன் சிரித்துக் கொண்டே வந்தவள், என்னை கண்டதும் சிரிப்பை நிறுத்திவிட்டாள்.

என்ன கண்டதும், தனியாக வந்து இங்க ஏன் வந்த என கேட்டாள். உன்னை பார்க்க தான். ஏன் வரக் கூடாதா? என்றேன். “கூடாது” என முகத்தில் அடித்தப்படி கூறினாள். உனக்கு என்ன பிடிக்கலன்னா சொல்லியிருக்கலாம். ஏன் இத்தன நாளா மறைச்சே.. என்ன பிடிக்காம போக என்ன காரணம். நான் தான் எதுவுமே பண்ணலையே… என்றேன். “நீ அழுக்கா இருக்க” என எனது மெக்கானிக் சட்டை கலாரைப் பிடித்துக் கூறினாள்.

என் பணத்தை உறுஞ்சிவிட்டு
என் பணத்தை உறுஞ்சிவிட்டு

தலைக்கு மேல் கோபம் வந்தது. கல்லூரி சுற்றுலாக்களுக்கு செல்ல காசு எடுத்து கொடுத்தது அதே அழுக்கு சட்டையில் இருந்துதான். அது மட்டும் இனித்ததா? இந்த அழுக்கு சட்டை தான் உன்னை காதலித்து. நீ கட்டியணத்த போதும் இந்த அழுக்கு சட்டை தான் உன்னை உரசிக் கொண்டிருந்தது. எனக்கு சோறுப் போடுவதும். நீ சாப்பிட்டு காசுக் கொடுக்க பணமில்லாமல் இருந்த போது ஓடி வந்து உதவியதும் இந்த அழுக்கு சட்டை தான் என கூறி அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

இன்றுடன் நானும், அவளும் பிரிந்து ஐந்தாண்டுகள் ஆகிறது. இப்போது அவள் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். ஊதியம் எப்படியும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என் அறிகிறேன். சில மாதங்களுக்கு முன்னர், ஒரு தோழி மூலமாக நான் அவளுக்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க கூறி அனுப்பினாள். மறுத்து திருப்பி அனுப்பிவிட்டேன். மனிதர்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை. நான் விரும்பிய ஆசைகளில் ஒன்று அப்படி நிறைவேறாமல் போய்விட்டது என கூறி மனதைத் தேத்திக் கொள்கிறேன்.

தங்கைக்கு திருமணமாகிவிட்டது., அப்பாவிற்கு ஓய்வளித்துவிட்டேன். எனது மெக்கானிக் வர்க்ஷாபை பெரிதுப்படுத்திவிட்டேன். சில மாதங்களாக எனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பேச்சு நடந்து வருகிறது. ஏனோ, அவளது எண்ணங்கள் மீண்டும் என்னுள் எழ துவங்குகிறது. நண்பர்கள், இன்னும் ஏண்டா அவள நெனச்சுட்டு இருக்க.. அவ உன்ன லவ் பண்ணல. நீ மட்டும் ஏண்டா மறக்காம இருக்க என திட்டுகிறார்கள்.

எனக்கும் தெரியும் அவள் என்னை காதலிக்கவில்லை என. ஆயினும், மனதுக்கு இது எதுவும் புரிவதில்லை. நான் முதன் முதலில் கட்டியணைத்த பெண் அவள். நான் முதன் முதலில் முத்தமிட்ட பெண் அவள். கண்டிப்பாக இந்த காதல் மீண்டும் இணைய வாய்ப்பில்லை. படிக்கும் போதே என்னை அழுக்கென கூறியவளுக்கு, இன்று ஐம்பதாயிரம் சம்பாதிக்கும் போது எப்படி எல்லாம் தோன்றும் என தெரியவில்லை. சீக்கிரமே அவள் மீதான எண்ணங்கள் என்னுள் அடங்கிவிடும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன்.