பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் உள்ளாடை

5514

பெண்கள் பாலியல் தொல்லைகளுக்குள்ளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று இந்தியாவைச் சேர்ந்த 19 வயது மாணவி கூறியுள்ளார்.

தற்போது உள்ள உலகில் பெண்கள் ஏராளமானோர் பாலியல் தொல்லைக்குள்ளாகின்றனர்.

இதனால் இதிலிருந்து இவர்களை காப்பாற்றுவதற்காக உத்திரப்பிரதேசத்தின் பரூகாபாத் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சீனூ(19) ரேப் ப்ரூப் பேண்ட்டி என்ற உள்ளாடையை கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த உள்ளாடையை வடிவமைப்பதற்கு புல்லட் ப்ரூப் வகையிலான துணியை பயன்படுத்தியிருப்பதாகவும், இதன் உள்ளே ஒரு ஸ்மார்ட் லாக், ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் பதிவுக்கருவி போன்றவைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த உள்ளாடையை வெட்டவோ அல்லது எரிக்கவோ முடியாது என்று இதில் இருக்கும் ஸ்மார்ட் லாக், கடவுச்சொல் இல்லாமல் திறக்காது எனவும் கூறும் அவர், இதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் 100 அல்லது அவசர அழைப்பு எண் ஒன்றுக்கு உடனே தொலைபேசி அழைப்பு செல்லும், அதில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆர்.எஸ்ஸின் உதவியால் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை பொலிஸ் கண்டுபிடித்துவிடும். அதோடு, பதிவுக்கருவி அக்கம்பக்கத்தில் எழும் ஓசைகளை பதிவு செய்யத் துவங்கிவிடும்.

இது தயாரிப்பதற்கு 4,000 ரூபாய் செலவு ஆனதாகவும், தனது குடும்பத்தினர் ஊக்கம் அளித்ததால், இதை செய்ய முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

இவரின் இந்த கண்டுபிடிப்பைக் கண்டு மத்திய அமைச்சர் மேனகா காந்தி பாராட்டியுள்ளார். இதை பெண்கள் எப்போதும் அணிய வேண்டியதில்லை எனவும், தனியாக செல்லும் போது தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எப்போது உணர்கிறீர்களோ அப்போது இதை அணிந்து கொண்டு செல்லலாம் எனவும் மாணவி சீனூ கூறியுள்ளார்.

தற்போது சீனூ தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார், அரசு உதவினால் இதைவிட சிறப்பாக கண்டுபிடிக்க முடியும் எனவும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஏதேனும் நிறுவனங்களோ அல்லது அரசோ உதவி செய்தால் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்று பலர் கருதுகின்றனர்.