லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறிவிட்டு ஆடு மேய்க்கும் பட்டதாரி பெண்!

238

தனது ‘Fashion Designer’ வேலையை விடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆடு வளர்ப்பு மூலம், லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகிறார் ஸ்வேதா எனும் பெண்.

பெங்களூரில், தனது கணவருடன் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் ஸ்வேதா. இவர், Fashion Designer ஆக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஒருமுறை தன் கணவருடன் ஆடு வளர்ப்பு பண்ணையை பார்வையிட்டார். அங்குள்ள ஆடுகளுடன் நேரம் செலவிட்டது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு, அடிக்கடி அந்த பண்ணைக்கு சென்று, ஆடு வளர்ப்பு முறைகள் பற்றி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, சொந்த தொழிலில் ஈடுபட நினைத்த ஸ்வேதா, அதற்காக ஆடு வளர்ப்பை தெரிவு செய்தார்.

ஆனால், அவரின் நெருங்கிய உறவினர்கள் ஸ்வேதாவின் முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆடை வடிவமைப்பாளராக பெருநிறுவனத்தில் வேலை செய்தால், நிறைய சம்பாதிக்கலாம், அதை விடுத்து ஆடு வளர்ப்பை தெரிவு செய்தது தவறான முடிவு என அவர்கள் கூறினர்.

எனினும், ஸ்வேதா சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், இந்த வேலையை செய்ய அவருக்கு கடினமாக தெரியவில்லை. மேலும், நகரத்தில் இதனை செய்ய முடியாது என்று அறிந்த அவர், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார்.

அங்குள்ள ராணிபோக்ரி எனும் கிராமத்திற்கு சென்ற அவர், தனது சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்து, ஆடு வளர்ப்பு பணியைத் துவங்கினார். அதன் பின், விரிவாக்கப் பணிகளுக்காக வங்கியிலிருந்து கடனும் வாங்கினார்.

ஸ்வேதா, ஆடு வளர்ப்பிற்கு திட்டமிட்ட பகுதியில், ஏராளமான வன விலங்குகள் இருந்தன. அவை தனது ஆடுகளைத் தாக்கக் கூடும் என, முதலில் அஞ்சிய ஸ்வேதா பின்னர் உற்சாகமாக தனது முயற்சியை துவங்கினார்.

சுமார் 250 ஆடுகளுடன் தனது பண்ணையை தொடங்கினார் ஸ்வேதா. அவற்றில் நாட்டு இனங்களான ஜம்னாபாரி, தோத்தாபரி, சிரோஹி, பார்பரி போன்றவையே இருந்தன.

ஆடுகளுக்கு முறையான பராமரிப்பும், ஊட்டச்சத்தும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கும் ஸ்வேதா, சில சமயம் அவரே சந்தைக்கு சென்று, ஆடுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார். மேலும், இணையத்திலும் ஆடுகளை விற்பனை செய்கிறார்.

ஸ்வேதா, கடந்த ஆண்டு மட்டும் 25 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார். தனது பண்ணையில் பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்துள்ள அவர், அதில் பங்கேற்பவர்களை ஆடு வளர்ப்பில் ஈடுபட ஊக்குவிக்கிறார்.

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தின் பிற பகுதிகளிலும், தனது பண்ணையை விரிவடைய திட்டமிட்டுள்ளார் ஸ்வேதா.