அன்று எனக்கு பாலியல் ரீதியாக நடந்த சம்பவம்: 13 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த இளைஞர்

472

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

சிறுவனாக இருந்த போது பாலியல் ரீதியாக தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து 13 வருடங்களுக்கு பின்னர் அந்த இளைஞர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் பகிர்ந்துகொண்டதாவது, நான் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், அடுத்ததாக சிறந்த பள்ளயில் நான் பயில வேண்டும் என எனது தந்தை விரும்பினார்.

மேலும், நுழைவுத்தேர்விலும் நான் வெற்றிபெற்றால் எனக்கு நல்ல எதிர்காலம் அமையும் என நினைத்து, நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக அலிகாரில் உள்ள தனியார் விடுதியில் என்னுடைய தந்தை சேர்த்தார். அப்போது, அந்த விடுதியில் எனது அறையில் 29 வயதான ஆராய்ச்சி மாணவர் பயின்று வந்தார்.

நான் விடுதியில் சேர்ந்த நான் முதல் அவர் என்னை மிகவும் அக்கறையோடு பார்த்துக்கொண்டார். எனக்கு பாடத்தில் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

ஒருநாள் இரவு என்னுடைய உடலில் ஏதோ நடக்கிறது என்று உணர்ந்து எழுந்தேன். எழுந்து பார்த்தால், என்னுடைய ரூம்மேட் பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருந்தார் என்பதை கண்டுகொண்டேன். அது பாலியல் துன்புறுத்தல் தான் என்று கூட எனக்கு அப்பொழுது தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்பது தெரியாமலே நான் அனுமதித்துவிட்டேன்.

அப்பொழுது எனக்கு தெரிந்தது எல்லாம், நடந்து கொண்டிருந்தது சரியல்ல என்பது மட்டும் தான். சுமார் இரண்டு மாதங்கள், ஒவ்வொரு இரவும் அவர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்வார்.

என்னுடைய ஆறுதலுக்காக மத ரீதியாக புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். பிரார்த்தனைகளையும் செய்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றபின்னர் அந்த தனியார் விடுதியில் இருந்து வெளியேறி பல்கலைக்கழக விடுதிக்கு உடனே சென்றுவிட்டேன். என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அந்த நபர் என்னை வெளியேற விடாமல் கடுமையாக தடுத்தார்.

அவருடன் நான் சண்டையிட்டேன். அன்றிலிருந்து நான் அவரை சந்திக்கவில்லை. இளைஞன் ஆன பின்னர் பல நாட்கள் யோசித்து திருமணம் செய்து கொள்வது தான் இந்த எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று முடிவு செய்தேன். ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டேன். பாலியல் குறித்து எனக்கு இருந்த எதிர்மறை எண்ணங்கள், என்னுடைய இல்லற வாழ்க்கையை பாதித்தது.

அதன் பின்னர், எனது மனைவியின் துணையோடு அதிலிருந்து மீண்டு வந்தேன். ஒரு வழக்கறிஞராக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் 2012 பற்றி கற்றுக் கொண்ட போது குழந்தைகள் நலன்கள் குறித்து அறிமுகமானது. தற்போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்கு நான் விரும்புகிறேன்.

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து வழக்கறிஞர் சொன்னதை தெரிந்து கொள்ளும் வரை எனக்கு நடந்ததை புரிந்து கொள்ளாமல் இருந்தேன்.

நான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்பதை அது எனக்கு உணர்த்தியது.