திருமணத்திற்காக பெண் பார்க்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன நடந்தது தெரியுமா?

309

தமிழகத்தில் திருமணத்திற்காக பெண் பார்க்க சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் போன்றவைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த 2 வருடங்களாக தன் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளார்.

இதற்காக அவர் பிரபலமான திருமண வரன் பார்ப்பவர்களுக்கான இணையதளத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை பதிவு செய்துள்ளார்.

அடில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய பெண் ஒருவர் தன் பெயர் பிரியா ஐயர் என்றும், தான் பெங்களூரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், தாம் உங்களை நேரில் சந்திக்கலாமா என்று கூறியுள்ளார்.

இதற்கு அவரும் சரி என்று கூறியதால், குறிப்பிட்ட நாள் ஒன்றில் இரவு சென்னையில் இருக்கும் சங்கம் தியேட்டரில் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் பின் மீண்டும் அழைத்த அந்த பெண் வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் தொடர்பு கொண்ட அந்த பெண் ஒரு கெஸ்ட் ஹவுசில் சந்திக்கலாம் என்று இடத்தை மாற்றி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதை நம்பி அங்கு சென்ற போது, பெண் ஒருவர் நான் தான் பிரியா ஐயர் என்று அறிமுகம் ஆகியுள்ளார்.

அவருடன் சேர்த்து 3 ஆண்களும் இருந்து உள்ளனர். அவர்களை பிரியாவின் உறவினர்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து உடன் இருந்த 3 பேரும் திடீரென்று கத்தியை எடுத்து மிரட்டி, களிசரனிடம் இருந்த செல்போன், தங்கச்செயின் போன்றவைகளை பிடுங்கியுள்ளனர்.

அவரது ஏடிஎம் கார்டையும் பிடுங்கி ரகசிய நம்பரையும் வாங்கி சென்றுள்ளனர். காளிசரணை புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த கும்பல் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

ஆனால் காளிசரன் அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வட இந்தியர்கள் போன்று இருந்ததாக பொலிசாரிடம் அடையாளம் கூறியதால், அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது காளிசரணை ஏமாற்றி பணம் பறித்த கும்பலை கைது செய்துள்ளனர். அவர்களில் கொச்சியை சேர்ந்த சாவித்திரி (52), கோடம்பாக்கம் சிவா, மாதவரம் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.