பிரித்தானிய பெண்ணை காதலித்து கரம் பிடித்த தமிழர் சிவகார்த்திகேயன்!

262

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழக இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கோவை மாவட்டம் செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி-வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). M.Sc படித்துள்ள இவர், கடந்த 2008ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர்(26) என்ற பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இவர்களது முடிவை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி கிறித்துவ முறைப்படி சிவகார்த்திகேயன்-அலிஷியாவுக்கு திருமணம் நடந்தது.

அதன் பின்னர், இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்த சிவகார்த்திகேயன், அதற்காக தனது மனைவியுடன் கோவைக்கு வந்தார்.

பின்னர், செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோவிலில் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடிக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்ததும் இருவரும் மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல உள்ளனர்.