மருத்துவ கழிவு என ஒதுக்கிய மருத்துவர்கள்: 14 வார சிசுவின் புகைப்படத்தை பகிர்ந்த தாயார்

2120

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் மருத்துவர்களால் கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசுவின் புகைப்படத்தை தாயார் ஒருவர் பகிர்ந்துள்ளது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மிசூரி மாகாணத்தில் ஃபேர் க்ரோவ் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் ஷெரென் மற்றும் மைக்கேல் தம்பதி.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காக காத்திருந்த இந்த தம்பதிக்கு இறுதியில் அந்த இனிப்பான தகவல் கிடைத்தது.

ஆனால் தித்திப்பான அந்த நாட்களுக்கு அதிக ஆயுள் இல்லாமல் போனது என தனது சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஷெரென்,

14-வது வாரம் மருத்துவ சோதனைக்காக சென்றபோது அந்த துயர செய்தி அறிந்து கணவரும் தானும் உடைந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் 20 வாரம் கடந்த கருவையே மருத்துவ ரீதியாக குழந்தை என கருத்தில் கொள்கின்றனர்.

ஷெரெனின் வயிற்றில் வளரும் 14 வார சிசுவிற்கு இருதம் துடிக்கவில்லை எனவும், மருத்துவத்தை பொறுத்தமட்டில் இது வெறும் கழிவு எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கழிவானாலும் தமக்கு இது குழந்தை எனவும் இதுநாள் வரையான வாழ்க்கையின் கனவும் எதிர்பார்ப்பும் என கூறிய ஷெரென், கருவை கலைக்காமல் பிரசவிக்கவே முடிவு செய்துள்ளார்.

இறந்து பிறந்த அந்த சிசுவிற்கு மிரான் எனவும் பெயர் வைத்துள்ளனர். குழந்தை இறந்து பிறந்தாலும் கடவுள் தமக்கு பிரசவிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி எனக் கூறும் அவர்,

குறித்த சிசுவை தங்கள் குடியிருப்பு எடுத்துவந்து ஒருவார காலம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்துள்ளனர்.

நான்கு அங்குலம் கொண்ட அந்த குழந்தை வெறும் 26 கிராம் எடையே இருந்துள்ளது. ஒருவார காலம் பாதுகாத்த பின்னர் தங்களது குடியிருப்பில் உள்ள பூந்தொட்டி ஒன்றில் குறித்த சிசுவை புதைத்துள்ளனர்.

சட்டப்படி குழந்தையாக பாவிக்க முடியாது என்பதால் இயற்கையான நல்லடக்கத்தை வழங்க முடியாமல் போனது எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மிரானின் கால்கள் மற்றும் கைகளின் புகைப்படங்களை பதிவு செய்த ஷெரென், தமது தாளாத துக்கத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.