பயணத்தினிடையே மாயமான மனைவி… 2 ஆண்டுகள் தேடி அலைந்த கணவர்: இறுதியில்…

903

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான மனைவியை அவர் கணவர் 2 ஆண்டுகள் தேடி அலைந்து மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் தேசத்தையே உலுக்கிய நிகழ்வுகளில் ஒன்று.

தொடர்ந்து பெய்த மழை பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

சாலைகள், பாலங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. உறவினர்களை இழந்த பலர் இழப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை முன்னெடுக்கத் துவங்கினர்.

ஆனால் ஒருவர் மட்டும் தமது மனைவியின் இழப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவும், நாட்டின் எங்கோ ஒரு பகுதியில் அவர் உயிருடன் உள்ளார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் பகுதியில் பயண முகவராக செயல்பட்டு வந்தவர் விஜேந்திரசிங் ராத்தோர். வேலை நிமித்தம் மாநிலத்தின் பல பகுதிகளிலும், அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி சென்று வருவார்.

2013 ஆம் ஆண்டு கேதார்நாத் பகுதிக்கு பயணப்பட்ட விஜேந்தர்சிங்கின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.

கேதார்நாத் புறப்பட்டு சென்ற 30 பயணிகளில் இவரது மனைவி லீலாவும் ஒருவர். உத்தரகாண்டில் இவர்கள் சென்று சேர்ந்த அன்று பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

லீலா அந்த பெருவெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளார். தனது மனைவியை அவர் தேடாத இடம் இல்லை. அங்கு எவரையும் தமக்கு அறிமுகம் இல்லை என கூறும் விஜேந்தர்,

தமது கைவசம் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே மிஞ்சியது எனவும், அதைக் கொண்டு தென்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.

பல நாட்கள், மாதங்கள் என தேடி அலைந்தும் மனைவியை காணாமல் பித்துப்பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டார் விஜேந்தர்.

இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத விஜேந்தர் ஒரு நாள் தாம் அவரை கண்டுபிடிப்பேன் எனவும் உறுதியாக நம்பினார்.

ராஜஸ்தானில் பிள்ளைகள் காத்திருந்தாலும், மனைவி இல்லாமல் கேதார்நாத் விட்டுச் செல்ல அவரால் முடியவில்லை.

அங்குள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் சென்று தேடியுள்ளார். இறுதியில் அரசு வெளியிட்ட இறந்தவர்கள் பட்டியலில் லீலாவின் பெயரும் வெளியானது.

மரணமடைந்தவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடும் அரசு அறிவித்தது. ஆனால் அந்த தொகையை வாங்க மறுத்த விஜேந்தர், தமது மனைவி உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பினார்.

இந்த நிலையில் 2015 ஜனவரி 27 ஆம் திகதி உத்தரகாண்டில் உள்ள ஒரு கிராம மக்கள் விஜேந்தருக்கு அந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

மன நிலை பாதித்த ஒரு பெண்ணை அவர்கள் கண்டுள்ளதாகவும், அவர் லீலா போன்ற தோற்றத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அதே நிமிடம் பறந்து சென்ற விஜேந்தர் அங்கு தமது மனைவி லீலாவை நீண்ட 2 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்துள்ளார்.

கணவர், பிள்ளைகள் என அனைத்தையும் இழந்ததாக கருதிய லீலாவுக்கு நாளடைவில் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் லீலாவின் நிலையில் மாறுதல் உண்டு எனவும், புது வாழ்க்கையை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விஜேந்தர் தெரிவித்துள்ளார்.