விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய பகுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

442

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் மன்னார் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஜோ ரூட் உட்பட வீரர்கள் பலர் இன்று மன்னார் பெரியமடு பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புகைப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக வீரர்கள் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் உதவிக்கமைய மெக் என்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு, மன்னார் பெரியமடு பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை கண்காணிப்பதற்காக இங்கிலாந்து கிரிகெட் அணி வீரர்கள் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஜே ரூட், ஜேம்ஸ் டொரிஸ், கீடன் ஜெனிக்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, ஒலி ஸ்டோன் ஆகிய வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், அணி முகாமையாளர்கள் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையினை பார்வையிட்டுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை இன்றைய தினம் மன்னார் பிரதேசத்திற்கு அழைத்து செல்லும் வேலைத்திட்டத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனைத்து வீரர்களுக்கும் அவசியமான பாதுகாப்பு இலங்கை விமானப்படையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.