தலை துண்டிக்கப்பட்டு முண்டமாக கிடந்த கல்லூரி மாணவர் சடலம்: கட்டியணைத்து கதறிய தந்தை!

431

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவரின் சடலம் மீட்கபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடி அருகே சேலம் – விருதாச்சலம் இடையிலான ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது அவருடைய சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து, சிங்கிபுரம் கிழக்கு சாலையைச் சேர்ந்த அசோகன் மகன் குகன்ராஜ் (20) என்பதும், அவர் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

இதற்கிடையில் கடந்த 7-ம் தேதியன்று, கல்லூரிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என குகனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இறந்துகிடப்பது அசோகனின் மகன் தான் என்பதை உறுதி செய்ய பொலிஸார் அவருக்கு அழைப்பு விடுத்தனர்.

அதன்பேரில் வந்த அசோகன், சடலத்தை பார்த்ததும் ‘மகனே’ என கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மேலும், தன்னுடைய மகனை யாரோ கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு வீசி எறிந்துவிட்டதாக குற்றம் சுமத்தினார்.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கல்லூரி பேருந்தில் சென்றுவிட்டு வழக்கமாக வீடு திரும்பும் குகன், 7-ம் தேதியன்று மட்டும் சிங்கிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்காமல் வாழப்பாடிக்குச் சென்று இறங்கியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில், கிழிந்த பையை வாழப்பாடியில் தைத்து விட்டு வருகிறேன் என குகன் கூறிவிட்டு சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.