“சாதி மதம் அற்ற பெண்” என இந்தியாவிலேயே முதல் சான்றிதழ் வாங்கிய வேலூர் பெண் ! குவியும் வாழ்த்து மழை!

127

காலம் அனைத்தையும் மாற்றும் என்று சொல்லுவார்கள் ! ஆனால் , அதனால் மாற்ற முடியாத விடயம் இந்த சாதி மட்டும் தான் ! ஆம் ! எவ்வளவு காலம் கடந்தும் இந்த சாதி மட்டும் இன்னும் சுற்றி கொண்டுதான் இருக்கிறது ! ஒருவன் சமூகத்தில் தலைநிமிர்வதும் தலை குனிவதும் அவனவன் சாதியின் ஆட்பறிப்பினாலும் , ஆள் பலத்தினாலும் தான் என்ற கட்டுக்கதைகளை விதைத்து அனைவர் மனதிலும் விச நஞ்சுகளை அன்றே கலந்திருக்கிறார்கள் !

” நல்ல வேலை ! இங்கே நரைமுடியோடு ஒரு கிழவன் அதை நெற்றிக்கு நெற்றி எதிர்த்து அதில் வெற்றியும் கண்டு உனக்கு நான் போதும் என்று தலை நிமிர்ந்து காட்டி தன்னோடு சேர்த்து சாதி திமிறும் மண்ணோடு இழுத்து கொண்டான் ! “
அவருக்கு பிறகு , இங்கு யாரும் அவ்வளவு பெரிய செயலை செய்து விடவில்லை ! என்பதே நிதர்சனம் ! ஆனால் அந்த கொள்கை இன்னும் இங்கு இருப்பதால்தான் மதங்களும் சாதிகளும் தென்னிந்திய திருநாட்டை தொட முடியவில்லை ! ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது ! அதுவும் விலக சில புரட்சி தேவை அப்படியாகப்பட்ட புரட்சி தான் இது !

சினேகா , வேலூரில் வழக்கறிஞராக பணிபுரியும் பெண் , தனக்கு சாதியும் இல்லை , மதமும் இல்லை என சான்றிதழ் வாங்கி அழகான அமைதியான ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளார் !

அவரின் வார்த்தைகள் இதோ ! …

“எங்க அம்மா, அப்பா இருவருமே வழக்கறிஞர்கள். எங்க வீட்டில நான் உட்பட மூன்று அக்கா, தங்கைகள் இருக்கோம். மூணு பேருமே வழக்கறிஞர்களாகத் தான் இன்னைக்கி இருக்கோம்.

எங்க அம்மா- அப்பா சாதி, மதம் இல்லைன்னுதான் எங்களுக்கு ஊட்டி வளர்த்தாங்க. முதலாவதா பள்ளியில சேர்க்கும் போதே சாதி மதம் அற்றவள் என் மகள்ன்னுதான் எங்க அப்பா எங்களைப் பள்ளியில் சேர்த்தாங்க. சாதி, மதம் இல்லாமலா என பல கேள்விகளைக் கடந்துதான் பள்ளி அட்மிஷனே கெடச்சது.

சாதி மதம் எங்கக் குடும்பப் பெயரிலக்கூட தெரிய கூடாதுன்னுதான் எனக்கு சினேகா, என் கூடப்பிறந்த சகோதரிகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர்-ன்னு பேரு வச்சாங்க. காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாகத்தான் சிநேகா-ன்னு பேரு வச்சாங்க. எனக்கும் மூணு பெண் பிள்ளைங்க. அவங்களுக்கு நானும் என் கணவர் எழுத்தாளர் பார்த்த்சாரதியும் சேர்ந்து முடிவுசெஞ்சு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி-ன்னு பேருவச்சு வளர்க்குறோம்.

’மதம் மக்களின் அபின்’-ன்னு மார்க்ஸ் சொல்லுவார். சாதிய அமைப்புக்கு அடையாளமா இருக்கும் சாதி சான்றிதழ் போல, சாதி மதம் அற்றவர் என்ற எங்க வாழ்வுக்கும் அடையாளம் வேணும். அதுக்கும் ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து கடுமையா முயற்சி செய்திட்டு இருந்தேன். 2017-ம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை விண்ணப்பமா வச்சு முயற்சி இறுதியில இன்னைக்கு ஜெயிச்சிருக்கேன்.

“என்ன சாதின்னு சொல்ல உரிமை இருக்கு ஆனா சாதி மதம் இல்லைன்னு சொல்ல உரிமை இல்லைன்னு பலமுறை என்னோட விண்ணப்பம் எல்லாம் தூக்கி எறியப்பட்டுச்சு”

இன்னைக்கி திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உதவியாலதான் என் முயற்சிக்குப் பலன் கெடச்சிருக்கு” என சாதி மதம் அற்றவராகப் பெருமையுடன் தனது சாதனைப் போராட்டத்தை விவரித்தார் சினேகா.