இரண்டு ஆதிவாசி குழுக்களுக்குள் மோதல்: பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தலையிடும் அரசு

205

இரண்டு அமேஸான் ஆதிவாசி குழுக்களுக்குள் நிகழ்ந்துவரும் மோதலைக் கட்டுப்படுத்த பிரேஸில் அரசு உதவிக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

அமேஸான் காடுகளில் 20 கிலோமீற்றர் இடைவெளியில் வாழும் இரண்டு ஆதிவாசிக் குழுக்கள் மாட்டிஸ் மற்றும் கொருபோக்கள்.

2013ஆம் ஆண்டு மாட்டிஸ் இனத்தவர்கள் கொருபோ இனத்தவர்களை சந்தித்தார்கள். முதலில் இரு இனத்தவர்களும் நட்பாக இருந்தாலும், பின்னர் இரு குழுக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் கொருபோ இனத்தைச் சேர்ந்த சிலர் வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்தார்கள்.

ஆனால் அவர்கள் மாட்டிஸ் இனத்தால் கொல்லப்பட்டு விட்டதாக தவறாக புரிந்து கொண்ட கொருபோக்கள் மாட்டிஸ் இனத்தவரை பழி வாங்க காத்திருக்கிறார்கள்.

எனவே அச்சத்தில் வாழும் மாட்டிஸ் இனத்தவர்கள், பிரேஸில் அரசின் உதவியை நாடியுள்ளார்கள்.

தற்போது பிரேஸில் அரசு அனுப்பியுள்ள உதவிக்குழு, பிரிந்து போன அந்த கொரூபோக்களை தேடிச் செல்லுகிறார்கள்.

அவர்கள் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த உதவிக்குழு ஏற்கனவே அமேஸானில் வசிக்கும் கொரூபாக்களுக்கு காட்ட வேண்டும், அவர்களை பிரிந்து போனவர்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

இதில் பிரச்சினை என்னவென்றால், அந்த பிரிந்து போன குழுவை மீண்டும் கொண்டு வந்தால், அவர்கள் தங்கள் உறவினர்கள்தான் என்பதை கொருபாக்கள் ஏற்றுக் கொள்வார்களா, அல்லது அவர்களுடனும் சண்டைக்கு போவார்களா என்பது தெரியாது.

என்ன நடக்கும் என்று தெரியாமல் அந்த காணாமல் போன கொரூபாக்களைத் தேடி, உதவிக்குழு காட்டுக்குள் விரைந்துள்ளது.