இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

140

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் காலநிலை தொடர்பில் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்ய கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலயிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.