நாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..!! இல்லாவிட்டால்…..?

879

பக்கத்து வீட்டு பொடியன் ஒன்று
படிப்பும் ஏறவில்லை!
பதினேழு வயசில் அவருக்கு
பல்சர் வேணுமாம் – இல்லை
பாய்வாராம் ரெயிலிலில,

இத்தனைக்கும் தந்தை இல்லாமல் தாய்
பத்து வீட்டில் பாத்திரம் கழுவி
பல்லிளிச்சு கடன் வாங்கி தங்கையையும் இவனையும் படிக்க வைக்க
பட்டபாடு ஊரறியும்.

ஒத்தப்பெடிப்புள்ளையெண்டு தாய்
ஒன்னும் குறைவிட்டதில்லை!
கஷ்டம் எண்டா என்னண்டு தெரியாம வளர்த்ததால இன்னைக்கு
கழுத்து வர வந்து நிக்கு!

ஐஞ்சு நாளைக்குள்ள
ஐம்பாதயிரம் வேணுமாம்
அப்பிள் போன் வாங்க – இல்லை
அசிட் குடிப்பாராம்!
அழுகுது தாய் மனிசி

அப்பு ராசா அசிட்டுக்கு எவ்வளவு முடியும்?
அந்த உதவி கூட நான் செய்யாட்டி
அயல்வீட்டுக்காரனா இருப்பதில்
அர்த்தம் இல்லயெல்லோ?

செத்து நீ போ!
உன் தாய் தினம் தினம் சாவதை விட…,
ஒரு நாள் செத்தவீடு கொண்ட்டாடட்டும்

ஆயுள் முழுதும் அழுது கொண்டே வாழ்வதை விட -அவள்
அனாதையாய் வாழ்வது மேல்..!

அஞ்சு ரூபா உழைக்க அடுத்தவன் படும் பாடு புரியுமா உனக்கு!- நீஎழுபது வயசிலும் எத்தனை பேர் கச்சான்,கடலை,கருவாடு, நொங்கெண்டு
ஏ நயின் வீதில இருக்குதுகள்
ஏதோ ஒரு நம்பிக்கையில,

ஒப்போ செவின் வாங்கு ஏன்,
ஐ போன் x வாங்கினாலும் யாரும் கேட்க மாட்டாங்க – ஆனால்,
சொந்தமா உழைச்சு வாங்கு
சொர்க்கம் தெரியும்டா!

வயல் செய் ! வரம்பு கட்டு!
மூட்டைதூக்கு! முழுசா சம்பாதி!
கச்சான் வில்! கடையிலாவது நில்!
காசின் கனதி புரியும்!

#பெற்றோரே!

அன்பென்ற பெயரில் அதிகம் இடம் கொடுத்தால்
அழிவும் அவமானம் அடைவது திண்ணம்!

செல்லம் என்று பெயர் சொல்லி
சீரழித்து விடாதீர்கள்!

கேட்பதெல்லாம் கிடைக்க பழக்கி விட்டால்,
கொலைகாரனும் ஆகலாம் உன் பிள்ளை!
இம்சைகள் இடைஞ்சல்கள் ஆகி
இருப்பதை விட இவன் இல்லாது போகலாம் என்றும் தோணும் ஒருநாள்,

இவ்வளவு தான் எம் வருமானம்
இதற்குள் தான் வாழவேண்டும் என்று சொல்லி சொல்லி புரிய வையுங்கள்…வரம்புகள் இட்டு வாழ்க்கை முறையை வரையறை செய்யுங்கள்!

அடுத்த வீட்டுப்பிள்ளை ஆகாயத்தில் பறந்தால்,
அதே போல் பறக்க வேண்டும் இல்லை!
விரலுக்கேற்ப தான் வீக்கம் என்று
விளக்கம் சொல்லுங்கள்

இயலாமைக்கான காரணங்களை இடித்துரைங்கள்! இதயத்தில் விழும்படி

காணி விக்கக்கூட தயங்காதீர்கள் கல்விக்காக மட்டும்!

கல்விதான் எங்கள் கடைசி ஆயுதம் என்பதை கனவிலும் போய் உணர்த்துங்கள்

தயவு செய்து
செல்லம் என்று பெயர் சொல்லி..
சீரழித்து விடாதீர்கள்….

 நன்றி –

SP Theepakan